Monday 14 October 2013

மனசுக்குள்...



ஆழமான மனசுக்குள்..
வலிமையுள்ள உயிரினம் வலிமையற்றவைகளை வலைத்துப்போட்டு அசைபோட்டுக்கொண்டிருக்கிறது உலகம். தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ள கைதேர்ந்த நடிப்புகளுடன் அலைந்துகொண்டிருக்கும் மனிதர்கள்
யாரும் கன்டுகொள்ள முடியாதபடிக்கு செல்லும் பாதைகளுக்கேற்ப
முகமூடி அணிந்து கொண்டு அலையும் மனிதர்களோடு..கள்ளம் கபடமற்றவர்களின் ஏமாற்றங்கள் சூறைக்காற்றாய் சுற்றியடித்து மனபிறல்வுகளுக்கு ஆளாகி தவிக்கும் ஒரு மனுஷி…
விருதுநகர் மாவட்டம்- சூலக்கரை கிராமம்,
வறண்ட பூமியாகிவிட்டதில் சூலக்கரை மட்டும் விதிவிலக்கா என்ன?
விவசாயம் இல்லை.ஆடு,மாடுகள் மேய்ச்சல் நிலம் தேடி அலைகிறது.
கிராமப்புற பெரும் பகுதி குடும்பங்கள் வாழ்வின் வழிதேடி அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.பிழைப்பு தேடி அலையும் ஜனங்களுக்கு கிடைத்த ஒரே தொழில் தீப்பெட்டிஆபிஸ் தான்.  கைக்குழந்தையுடன் தூக்குவாளி சோற்றுடன் சீக்கிரமே வேலைக்கு வந்துவிட்டாள் சித்ரா.அவளது குழந்தையை
காம்பவுண்டுக்குள் இருந்த வேப்பமரத்தில் தொட்டில் கட்டி படுக்கபோட்டாள். யாரைப் பார்த்தாலும் எரிச்சலுடனும் சில சமயங்களில் அசிங்கமாகவும் கூட
பேசி யாரும் தன்னை அண்டாதவாறு பார்த்துக்கொண்டாள்.அவளுடன் வரும்
பெண்கள் கூட கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து வேலை செய்வார்கள்.ஒரு நாள் தீப்பெட்டிக்குள் சரியான எண்ணிக்கையில் தீக்குச்சிகளை வைக்கிறாளா?
என பெட்டியை எடுத்து எண்ணத்துவங்கினேன். எவனாச்சும் ஏதாவது சொன்னான் அம்புட்டுத்தான் .. ஏ புருசனே என்னக்கண்டு பயப்புடுவான்.எவனாவது இருக்கட்டும் வச்சுக்கிறேன் என புலம்பிக்கொண்டே
குனிந்த தலை நிமிராமல் பேசிக்கொண்டே இருந்தாள். நான் அவள் அருகில் போய் ஏம்மா ஒங் குழந்தை பேரென்னம்மா? ரொம்ப அழகா இருக்கேன்னேன்.
அம்புட்டுத்தான் மூஞ்சிய உம்முனு வச்சிக்கிட்டு என்னவாம் இப்ப.வந்தமா வேலை செஞ்சமா வீட்டுக்கு போனமான்னு இருங்க. தேவையில்லாம பேசி
கடுப்ப கெளப்பாதீகன்னு முகத்தை பார்க்காமலேயே பேசினாள்.எனக்கு ரொம்ப
சங்கடமா இருந்திச்சு.மத்தியான சாப்பாட்டுக்கு மேல நான் வந்த போது தொட்டிலில் குழந்தையுடம்பு பாதி கீழேயும் பாதி ஒடம்பு தொட்டிக்குள்ளேயும்
தொங்கிக்கொண்டு வீல் என அழுது கொண்டிருந்தது. அழுகை சத்தம் கேட்காத
தூரத்தில் சித்ரா வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் குழந்தையை சரியாக தொட்டிலில் படுக்கவைத்து ஆட்டிவிட்டேன்.அழுகையை நிறுத்துவதாக
தெரியவில்லை.அழுகையை நிறுத்தும் வரை தொட்டிலை ஆட்டிவிடுவது என
முடிவு செய்து ஆட்டுறேன் அப்பவும் அழுகை நின்னபாடில்ல.இத சித்ரா தூரத்ல இருந்து பாத்துக்கிட்டிருப்பத கூட நான் பாக்கல.என்னடா இவ்வளவு ஆட்டியும் அழுகைய நிறுத்தல அப்படீனு தொட்டி சீலய வெலக்கி பாத்தா பகீர்னு ஆகிப்போச்சு.குழந்தைக்கு வயித்துப்போக்காயி ரத்தமும் சலமுமாகி
பெரண்டு பெரண்டு படுத்து அழுகுது. தூக்கி விட முடிவு செய்த அந்த விநாடி
சித்ரா பக்கத்தில வந்து வெடுக்குனு தொட்டில் கயித்த இழுத்து குழந்தையை
தூக்கிக்கொண்டு அப்பால் சென்று விட்டால்.நானும் விடல ஏட்டிக்கு போட்டியா அவ பேசினாலும் என்ன பேச வைத்தது.. ஏம்மா என்னாச்சு? வாய தொறந்து சொல்லுமா? அவள் வாய் திறந்து பேசவே இல்லை.தன் சேலை முந்தியிலிருந்து ஒரு ரூபாவ எடுத்து டேய் சங்கரு இங்க வாடா என சத்தம்
கொடுத்தாள்.என்னக்கான்னு சங்கரு வந்தான்.மேட்டுக்கு ஓடி போயி ஒரு ரூவாக்கு ஓமதிராவம் வாங்கிட்டு வாடான்னு சொன்னாள்.ஏங்கா ஒரு ரூவாக்கு கொடுப்பாங்களா?அப்படின்னு சொன்ன நிமிஷத்துல தெரியும்டா மசுரு ஒரு பாட்டில கொண்டுபோயி கேளு கடைக்காரன் கொடுப்பான் என மூச்சு வாங்காம பேசினா.நான் தூரத்துல ஜெனரேட்டர் ரூமுக்கு பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன்.பய சைக்கிள எடுத்து சல்லுனு கெளம்பினான்.டேய் தம்பி நில்லுடான்னு நிப்பாட்டி அவன் கையில இருபது ரூபா கொடுத்து ஓமதிராவம் கெடைக்கலன்னா கிரேப்வாட்டர் பாட்டில் ஒன்னு வாங்கிக்கொடுன்னேன்.ஓமதிராவம் கெடைக்க வாய்பில்லைனு பட்டது.ஆனா பய மொகத்துல வேற சந்தோசம் ஒரு ரூபாய்க்கு சரக்கு கேட்பது கூட அவமானமா நெனச்சான் போல.கிரேப்வாட்டரை சித்ரா கையில கொடுத்த போது ஒன்னும் பேசாம குழந்தைக்கு கொடுத்துட்டா.நானும் ஒரு வேலையா சாத்தூருக்கு போயிட்டேன்.மறுநாள் காலையில வந்தவுடன் வேப்பமரத்தை தான் பார்த்தேன்.தொட்டில் தொங்கியது, அருகில் சென்று பார்த்தேன் குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. குழந்தையை பார்த்து,வளர்த்து,படிக்கவைக்க வேண்டியது தாய்-தகப்பன் இருவரின் கடமையல்லவா?குழந்தையின் தகப்பனை பற்றி கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.சில நாட்கள் கழிந்தன அவளிடம் கேட்டும் விட்டேன்.அந்நேரம் வந்தது பார் ஒரு கோபம்
நெஜமாகவே பயந்துட்டேன்.பிறகு சுதாரித்துக் கொண்டேன்.மனிதர்களுக்கான அடையாளமே –மனிதர்களை புரிந்து கொள்வதும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் தானே..என்ன பிரச்சனை எதுவானாலும் சொல்,ஒருவேளை நான் நல்ல ஆலோசனைகள் சொல்லலாம்,முடிந்தால் சிறு உதவிகள் கூட செய்யலாம்,.சும்மா சொல் என கேட்டேன். சிறிது நேரம் மவுனமாக இருந்த அவளின் கண்களில் கண்ணீர் பனித்தது.ஒரு சூறைக்காற்று குப்பைகளையும்,
சருகுகளையும் சுழற்றியடித்து வேகமாக வீசி எங்கள் அருகில் வந்து கடந்து போனது.அதில் அவளது கூந்தல் கலைந்தது. அதை சரிசெய்துகொண்டே
பேசினாள்.நான் கல்யாணத்திற்கு முன்னாடி ரொம்ப அழகா இருப்பேன்.என்னென்னமோ ஆசையெல்லாம் இருந்தது என் மனசுல.கல்யானம் முடிஞ்சவுடன் நானும் என் புருசனும் விருதுநகர் தெப்பத்து படித்துறையில் உக்காந்து பேசுறது பொட்டல்ல இருக்குற சூஸ் கடையில பழ சூஸ் குடிக்கிறது..சென்ட்ரல் தியேட்டர்ல நெருக்கமா உட்காந்து சினிமா பாக்கிறதுனு
நிறைய கனவு எனக்குள்ள.. எட்டாம் வகுப்பு வரை படித்தவள் நான் எனக்கு எங்க அப்பனும்,அண்ணனும் நல்ல படிச்ச பிரியமா வச்சிக்கிற மாப்பிள்ளைய தான் எனக்கு கல்யானம் முடிச்சி வப்பாங்க அப்படீன்னு ஏ கூட இருந்த பிள்ளைககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும் போது திடீரென ஏட்டி உனக்கு மாப்பிள்ள பாத்து பேசி முடிச்சாச்சு.அடுத்த வாரம் கல்யானமுன்னு சொன்ன போது கொஞ்ச நேரம் தலை சுத்தி நின்னுச்சு.அவள் அழுதாள், புரண்டாள்,கதறினாள்,கெஞ்சினாள்.அவளின் மனதை அறிந்து கொள்ள மனம் இல்லை சுற்றியிருந்த மனிதர்களுக்கு.முடிவெடுத்தாள் கல்யான முதல்நாளில்
வீட்டை விட்டு வெளியேறுவது என.எங்கே போவது எங்கே தஞ்சம் அடைவது என திக்குத்தெரியவில்லை அவளுக்கு.கல்யானத்தை நிறுத்துவது இது தான் அப்பொழுது எடுத்த முடிவு.அண்ணனிடம் இதை சொல்லியும் விட்டாள்.எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த அவனை நம்பினாள்.கல்யாண முதல் நாளில் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு முன் டாடாசுமோ வந்து நின்றது.சினிமாவில் காட்டுவது போல் மயக்க மருந்து கலந்த கர்ச்சிப்பை மூக்கில் அமுக்கினார்கள்.
மயங்கிவிட்டேன்.மறுநாள் காலையில் தனியறையில் வைத்திருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று தாலி கட்டினான் தாய் மாமான் வீரன்.
இதை சொல்லி முடித்த போது பெரிய பாரத்தை இறக்கி வைத்தாற்போல அவளது முகம் இருப்பதாக நானாக நினைத்துக்கொண்டேன்.சாராயம்,கஞ்சா குடிச்சிட்டு வேலவெட்டி பார்க்காம ஊர் வம்பு செய்ற ஒரு ரவுடிப்பயல
வாக்கப்பட வச்சு என் கனவுகளை அழிச்சே போட்டங்க பாவிக..சோகமா உட்கார்ந்து இருந்தா என்னை தூக்கிப்போட்டு மிதிப்பான் காட்டான்.எங்க அப்பனும் செத்துப் போச்சு.கூடப் பிறந்தவன் பேருக்கு தானேயொழிய ஒரு பிரயோசனமும் கிடையாது..பார்த்தேன் இனி எல்லாம் நாம தான்.எனக்கு சரிசமமா யாரும் வந்து பேச கூட பயப்படனும் அதுக்கு என்ன நான் இப்படி மாத்திக்கிட்டேன்.இப்ப என் பக்கத்துல நின்னு பேச கூட பயப்படுறாங்க என் புருசனா இருக்கிறவன் கூட. சகோதரன போல நினைச்சுக்கோன்னு நீங்க சொன்ன போது கூட நான் நம்பல.மனுசனுக்கு அடையாளமே புரிந்துகொள்றதும் அன்பு செலுத்துவதும் தான்னு சொன்னீங்க பாருங்க அந்த வார்த்தை என்னை என்னமோ செஞ்சிருச்சி..அத எனக்கு சொல்ல தெரியலன்னு சொன்னபோது அவளின் அழுகை என்னையும் அனைத்துக் கொண்டது…அந்த நொடியில் தோழர் காமராஜ் எழுதிய சிறுகதையில் வரும்
லட்சுமியின் பிம்பம் என்னுள் தோன்றி மறைந்தது..

3 comments:

  1. தன்னைக்காக்க போட்டுக்கொண்ட வேலி கொஞ்சமல்ல,நிறையவே இருக்கமாகி இருக்கிறது,இதுபோலான் மாறுபட்டவைகளாய் நிறைய காணமுடியும்.நகரச்சுத்திப்பெண்களில் வம்பாக வெத்திலையும்.புகையிலையும் போட்டு தன்னை மக அழகை தானே சிதைத்துக்கொள்வது,பெட்டிக்கடை நடத்தும் பெண்கள் இப்படி வலிய தன் தோற்றத்தை சிதைத்து க்கொள்வது என நிறைய காணமுடிவதுண்டு.அப்படியான நடப்பை ஒரு பாதுகாப்பு அரணாக அவர்கள் கைகொள்கிறார்கள்.நல்ல எழுத்து,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான நடை , மனதினில் காட்சிகளாக விரிகிறது

    ReplyDelete