Thursday 31 October 2013

நம்பிக்கை ஒளி



நம்பிக்கை ஒளி

நீ தவழும் போது.,
நடை பழகிய போதும்…
“ம்..ம்மா..ஆ என-நீ பேசிய
பேச்சுகளும்-பொழுதுகளும்
இன்றும் எங்களது நினைவுகளில்
நிறைவாக..இனிதாகவும்.
                    
ஒரு பத்தாண்டு
முழுமையடைந்து-உனது
பூமியின் பார்வையில்
இன்று 13 ஆம் ஆண்டு
துவக்கம்…

இன்று,
உனது பேச்சால்
அடர்ந்த அமேசன் காடுகளின்
அற்புதங்கள் புரிந்தது..

புவி வெப்பமயமாதலின்
ஆபத்து – அக்கறையோடு
வரும் உனது பேச்சில்..
விஞ்ஞான புரிதல் கண்டோம்
உனது அறிவில்..

முன்னேறுகிறது…
உலகம் முன்னோக்கியே
உயர்கிறது-செல்கிறது..

உலகை பயனுள்ளதாய்
மானுடம் மாற்றும்-என்ற
என்ற நம்பிக்கையுடனும்
வாழ்த்துக்களுடனும்..

(அத்தையும்-மாமாவும்)

Monday 14 October 2013

மனசுக்குள்...



ஆழமான மனசுக்குள்..
வலிமையுள்ள உயிரினம் வலிமையற்றவைகளை வலைத்துப்போட்டு அசைபோட்டுக்கொண்டிருக்கிறது உலகம். தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ள கைதேர்ந்த நடிப்புகளுடன் அலைந்துகொண்டிருக்கும் மனிதர்கள்
யாரும் கன்டுகொள்ள முடியாதபடிக்கு செல்லும் பாதைகளுக்கேற்ப
முகமூடி அணிந்து கொண்டு அலையும் மனிதர்களோடு..கள்ளம் கபடமற்றவர்களின் ஏமாற்றங்கள் சூறைக்காற்றாய் சுற்றியடித்து மனபிறல்வுகளுக்கு ஆளாகி தவிக்கும் ஒரு மனுஷி…
விருதுநகர் மாவட்டம்- சூலக்கரை கிராமம்,
வறண்ட பூமியாகிவிட்டதில் சூலக்கரை மட்டும் விதிவிலக்கா என்ன?
விவசாயம் இல்லை.ஆடு,மாடுகள் மேய்ச்சல் நிலம் தேடி அலைகிறது.
கிராமப்புற பெரும் பகுதி குடும்பங்கள் வாழ்வின் வழிதேடி அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.பிழைப்பு தேடி அலையும் ஜனங்களுக்கு கிடைத்த ஒரே தொழில் தீப்பெட்டிஆபிஸ் தான்.  கைக்குழந்தையுடன் தூக்குவாளி சோற்றுடன் சீக்கிரமே வேலைக்கு வந்துவிட்டாள் சித்ரா.அவளது குழந்தையை
காம்பவுண்டுக்குள் இருந்த வேப்பமரத்தில் தொட்டில் கட்டி படுக்கபோட்டாள். யாரைப் பார்த்தாலும் எரிச்சலுடனும் சில சமயங்களில் அசிங்கமாகவும் கூட
பேசி யாரும் தன்னை அண்டாதவாறு பார்த்துக்கொண்டாள்.அவளுடன் வரும்
பெண்கள் கூட கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து வேலை செய்வார்கள்.ஒரு நாள் தீப்பெட்டிக்குள் சரியான எண்ணிக்கையில் தீக்குச்சிகளை வைக்கிறாளா?
என பெட்டியை எடுத்து எண்ணத்துவங்கினேன். எவனாச்சும் ஏதாவது சொன்னான் அம்புட்டுத்தான் .. ஏ புருசனே என்னக்கண்டு பயப்புடுவான்.எவனாவது இருக்கட்டும் வச்சுக்கிறேன் என புலம்பிக்கொண்டே
குனிந்த தலை நிமிராமல் பேசிக்கொண்டே இருந்தாள். நான் அவள் அருகில் போய் ஏம்மா ஒங் குழந்தை பேரென்னம்மா? ரொம்ப அழகா இருக்கேன்னேன்.
அம்புட்டுத்தான் மூஞ்சிய உம்முனு வச்சிக்கிட்டு என்னவாம் இப்ப.வந்தமா வேலை செஞ்சமா வீட்டுக்கு போனமான்னு இருங்க. தேவையில்லாம பேசி
கடுப்ப கெளப்பாதீகன்னு முகத்தை பார்க்காமலேயே பேசினாள்.எனக்கு ரொம்ப
சங்கடமா இருந்திச்சு.மத்தியான சாப்பாட்டுக்கு மேல நான் வந்த போது தொட்டிலில் குழந்தையுடம்பு பாதி கீழேயும் பாதி ஒடம்பு தொட்டிக்குள்ளேயும்
தொங்கிக்கொண்டு வீல் என அழுது கொண்டிருந்தது. அழுகை சத்தம் கேட்காத
தூரத்தில் சித்ரா வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் குழந்தையை சரியாக தொட்டிலில் படுக்கவைத்து ஆட்டிவிட்டேன்.அழுகையை நிறுத்துவதாக
தெரியவில்லை.அழுகையை நிறுத்தும் வரை தொட்டிலை ஆட்டிவிடுவது என
முடிவு செய்து ஆட்டுறேன் அப்பவும் அழுகை நின்னபாடில்ல.இத சித்ரா தூரத்ல இருந்து பாத்துக்கிட்டிருப்பத கூட நான் பாக்கல.என்னடா இவ்வளவு ஆட்டியும் அழுகைய நிறுத்தல அப்படீனு தொட்டி சீலய வெலக்கி பாத்தா பகீர்னு ஆகிப்போச்சு.குழந்தைக்கு வயித்துப்போக்காயி ரத்தமும் சலமுமாகி
பெரண்டு பெரண்டு படுத்து அழுகுது. தூக்கி விட முடிவு செய்த அந்த விநாடி
சித்ரா பக்கத்தில வந்து வெடுக்குனு தொட்டில் கயித்த இழுத்து குழந்தையை
தூக்கிக்கொண்டு அப்பால் சென்று விட்டால்.நானும் விடல ஏட்டிக்கு போட்டியா அவ பேசினாலும் என்ன பேச வைத்தது.. ஏம்மா என்னாச்சு? வாய தொறந்து சொல்லுமா? அவள் வாய் திறந்து பேசவே இல்லை.தன் சேலை முந்தியிலிருந்து ஒரு ரூபாவ எடுத்து டேய் சங்கரு இங்க வாடா என சத்தம்
கொடுத்தாள்.என்னக்கான்னு சங்கரு வந்தான்.மேட்டுக்கு ஓடி போயி ஒரு ரூவாக்கு ஓமதிராவம் வாங்கிட்டு வாடான்னு சொன்னாள்.ஏங்கா ஒரு ரூவாக்கு கொடுப்பாங்களா?அப்படின்னு சொன்ன நிமிஷத்துல தெரியும்டா மசுரு ஒரு பாட்டில கொண்டுபோயி கேளு கடைக்காரன் கொடுப்பான் என மூச்சு வாங்காம பேசினா.நான் தூரத்துல ஜெனரேட்டர் ரூமுக்கு பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன்.பய சைக்கிள எடுத்து சல்லுனு கெளம்பினான்.டேய் தம்பி நில்லுடான்னு நிப்பாட்டி அவன் கையில இருபது ரூபா கொடுத்து ஓமதிராவம் கெடைக்கலன்னா கிரேப்வாட்டர் பாட்டில் ஒன்னு வாங்கிக்கொடுன்னேன்.ஓமதிராவம் கெடைக்க வாய்பில்லைனு பட்டது.ஆனா பய மொகத்துல வேற சந்தோசம் ஒரு ரூபாய்க்கு சரக்கு கேட்பது கூட அவமானமா நெனச்சான் போல.கிரேப்வாட்டரை சித்ரா கையில கொடுத்த போது ஒன்னும் பேசாம குழந்தைக்கு கொடுத்துட்டா.நானும் ஒரு வேலையா சாத்தூருக்கு போயிட்டேன்.மறுநாள் காலையில வந்தவுடன் வேப்பமரத்தை தான் பார்த்தேன்.தொட்டில் தொங்கியது, அருகில் சென்று பார்த்தேன் குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது. குழந்தையை பார்த்து,வளர்த்து,படிக்கவைக்க வேண்டியது தாய்-தகப்பன் இருவரின் கடமையல்லவா?குழந்தையின் தகப்பனை பற்றி கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.சில நாட்கள் கழிந்தன அவளிடம் கேட்டும் விட்டேன்.அந்நேரம் வந்தது பார் ஒரு கோபம்
நெஜமாகவே பயந்துட்டேன்.பிறகு சுதாரித்துக் கொண்டேன்.மனிதர்களுக்கான அடையாளமே –மனிதர்களை புரிந்து கொள்வதும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் தானே..என்ன பிரச்சனை எதுவானாலும் சொல்,ஒருவேளை நான் நல்ல ஆலோசனைகள் சொல்லலாம்,முடிந்தால் சிறு உதவிகள் கூட செய்யலாம்,.சும்மா சொல் என கேட்டேன். சிறிது நேரம் மவுனமாக இருந்த அவளின் கண்களில் கண்ணீர் பனித்தது.ஒரு சூறைக்காற்று குப்பைகளையும்,
சருகுகளையும் சுழற்றியடித்து வேகமாக வீசி எங்கள் அருகில் வந்து கடந்து போனது.அதில் அவளது கூந்தல் கலைந்தது. அதை சரிசெய்துகொண்டே
பேசினாள்.நான் கல்யாணத்திற்கு முன்னாடி ரொம்ப அழகா இருப்பேன்.என்னென்னமோ ஆசையெல்லாம் இருந்தது என் மனசுல.கல்யானம் முடிஞ்சவுடன் நானும் என் புருசனும் விருதுநகர் தெப்பத்து படித்துறையில் உக்காந்து பேசுறது பொட்டல்ல இருக்குற சூஸ் கடையில பழ சூஸ் குடிக்கிறது..சென்ட்ரல் தியேட்டர்ல நெருக்கமா உட்காந்து சினிமா பாக்கிறதுனு
நிறைய கனவு எனக்குள்ள.. எட்டாம் வகுப்பு வரை படித்தவள் நான் எனக்கு எங்க அப்பனும்,அண்ணனும் நல்ல படிச்ச பிரியமா வச்சிக்கிற மாப்பிள்ளைய தான் எனக்கு கல்யானம் முடிச்சி வப்பாங்க அப்படீன்னு ஏ கூட இருந்த பிள்ளைககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும் போது திடீரென ஏட்டி உனக்கு மாப்பிள்ள பாத்து பேசி முடிச்சாச்சு.அடுத்த வாரம் கல்யானமுன்னு சொன்ன போது கொஞ்ச நேரம் தலை சுத்தி நின்னுச்சு.அவள் அழுதாள், புரண்டாள்,கதறினாள்,கெஞ்சினாள்.அவளின் மனதை அறிந்து கொள்ள மனம் இல்லை சுற்றியிருந்த மனிதர்களுக்கு.முடிவெடுத்தாள் கல்யான முதல்நாளில்
வீட்டை விட்டு வெளியேறுவது என.எங்கே போவது எங்கே தஞ்சம் அடைவது என திக்குத்தெரியவில்லை அவளுக்கு.கல்யானத்தை நிறுத்துவது இது தான் அப்பொழுது எடுத்த முடிவு.அண்ணனிடம் இதை சொல்லியும் விட்டாள்.எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்த அவனை நம்பினாள்.கல்யாண முதல் நாளில் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு முன் டாடாசுமோ வந்து நின்றது.சினிமாவில் காட்டுவது போல் மயக்க மருந்து கலந்த கர்ச்சிப்பை மூக்கில் அமுக்கினார்கள்.
மயங்கிவிட்டேன்.மறுநாள் காலையில் தனியறையில் வைத்திருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று தாலி கட்டினான் தாய் மாமான் வீரன்.
இதை சொல்லி முடித்த போது பெரிய பாரத்தை இறக்கி வைத்தாற்போல அவளது முகம் இருப்பதாக நானாக நினைத்துக்கொண்டேன்.சாராயம்,கஞ்சா குடிச்சிட்டு வேலவெட்டி பார்க்காம ஊர் வம்பு செய்ற ஒரு ரவுடிப்பயல
வாக்கப்பட வச்சு என் கனவுகளை அழிச்சே போட்டங்க பாவிக..சோகமா உட்கார்ந்து இருந்தா என்னை தூக்கிப்போட்டு மிதிப்பான் காட்டான்.எங்க அப்பனும் செத்துப் போச்சு.கூடப் பிறந்தவன் பேருக்கு தானேயொழிய ஒரு பிரயோசனமும் கிடையாது..பார்த்தேன் இனி எல்லாம் நாம தான்.எனக்கு சரிசமமா யாரும் வந்து பேச கூட பயப்படனும் அதுக்கு என்ன நான் இப்படி மாத்திக்கிட்டேன்.இப்ப என் பக்கத்துல நின்னு பேச கூட பயப்படுறாங்க என் புருசனா இருக்கிறவன் கூட. சகோதரன போல நினைச்சுக்கோன்னு நீங்க சொன்ன போது கூட நான் நம்பல.மனுசனுக்கு அடையாளமே புரிந்துகொள்றதும் அன்பு செலுத்துவதும் தான்னு சொன்னீங்க பாருங்க அந்த வார்த்தை என்னை என்னமோ செஞ்சிருச்சி..அத எனக்கு சொல்ல தெரியலன்னு சொன்னபோது அவளின் அழுகை என்னையும் அனைத்துக் கொண்டது…அந்த நொடியில் தோழர் காமராஜ் எழுதிய சிறுகதையில் வரும்
லட்சுமியின் பிம்பம் என்னுள் தோன்றி மறைந்தது..

Sunday 13 October 2013

சேதுதிட்டம்



அறிவியல் உண்மைகளை
கொஞ்சம் நம்புங்க சாமி
இந்திய தொல்பொருள் துறையும்,குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள
விண்வெளி பிரயோகங்கள் மையம் எனும் ஆய்வு நிறுவனமும் சேதுபாலம்
சுத்தமான இயற்கை கட்டமைப்பு என திட்டவட்டமாக கூறுகிறது.

இந்திய புவியியல் துறை அந்த பாலத்திலேயே துளை போட்டு ஆராய்ச்சி
செய்து அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் இந்திய துனைக்கண்டத்தில் மனிதர்கள் வாழத்துவங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையாக உருவானது என திட்டவட்டமாக கூறுகிறது.

அமெரிக்காவின் நாசா அமைப்பு செயற்கைகோள் மூலம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை காட்டியே ராமர் பாலம் எனத் துள்ளிக் குதித்தார்கள்.ஆனால் அதே அமைப்பு வெகுதூரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தைக்கொண்டு
அப்படி சொல்ல முடியாது என அதிரடியாக அறிவித்தது.

நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனமும்,
சேது சமுத்திர திட்டக்குழுவும் விரிவான ஆய்வுகள் செய்து சுற்றுச்சூழலுக்கும்
பவளப்பாறைகளுக்கும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என உறுதியாக தெரிவிக்கிறது. 

சேதுதிட்டம் நிறைவேறினால் தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாகும்.
தமிழகத்தின் தென்மாவட்ட இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
சுற்றுப்பாதை குறைவதால் ஏற்றுமதி கட்டணம் குறையும்.அதன் மூலம் தொழில்
வளர்ச்சி பெறும்.மீனவர்களின் இயங்குநிலை விரிவாகும்.

சேது சமுத்திர திட்டம்
நிறைவேற்ற வலியுறுத்தி...தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்
மாநில சிறப்பு மாநாடு
மதுரை..2013அக்டோபர்19
 
 


Thursday 10 October 2013

சமத்துவம்



சமத்துவம்

தாம்பூல தட்டுடன் பத்ரகாளி ஆபிஸ் ரூம் உள்ளே வந்தாள்.
தட்டில் இரண்டு ஆப்பிள், இரண்டு ஆரஞ்சு கொஞ்சம் திராட்சை,
வெற்றிலை பாக்குடன் வாடிய அந்த முகத்தில் ஒட்டியிருந்த
சின்ன சந்தோசம்.என்ன ஏதோ விஷேசம் போல் தெரிகிறது என்று
கேட்டவுடன் லேசான வெட்கத்துடன் ஆமா சார் என் மக வயசுக்க
வந்துட்டா சடங்கு வச்சிருக்கேன் நாளை மறுநாள்
வியாழக்கிழமை சாயந்திரம்., நீங்க அவசியம் வந்து என் பிள்ளைய ஆசிர்வதிக்கனும் என சொல்லிக்கொண்டே தட்டை நீட்டினாள்.
கண்டிப்பா வர்ரேன் என சொன்ன எனக்கு தட்டைவாங்க மனசு வர்ல.
ரெண்டு நாளுக்கு முன்னாடி காலைல வேலைக்கு வரும் போது என்ன பத்ரகாளி நேத்து வேலைக்குஆள காணோம் என கேட்ட போது சார் திடீரென காய்ச்சல் வந்துபெரிய ஆஸ்பத்திரிக்கு போனென் சார் பெட்ல சேத்து குளுகோஸ்ஏத்துனாங்க அதுனால வரமுடியல என சொன்ன போது மனசு
ரொம்ப சங்கடப்பட்டது.ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வர வேண்டியதுதானே என நான் சொன்னதை கேட்டு  பதறி போனாள்.உடம்ப சரி செஞ்ச பின்னாடி வா என சொல்லிவிடுவேன் என பயந்திருப்பாள் போல.நேத்து ஆஸ்பத்திரியிலிருந்த அவள் இன்று வேலைக்கு வர வேண்டிய
வாழ்வின் கஷ்டம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என என்னால்
உணர முடிந்தது.அதனால் தட்டில் உள்ள அவளின் மரியாதையை
ஏற்றுக்கொள்ள மனம் தயங்கியது.எடுக்கா விட்டால் தனது அன்பான அழைப்பை நான் புரிந்துகொள்ளவில்லை என்று அவளின் மனம் புண்படுமோ என பயந்து வாங்கிக்கொண்டேன்.

அந்த நாளும் வந்தது. கொஞ்சம் லேட்டா தான் போனேன்.ஊர்காரர்களும்,சொந்தபந்தங்களும் வீட்டின்முன் போட்டிருந்த சேர்களில்..சிலர் தள்ளாடியபடி..சிறுவர்கள் டியூப்லைட் வெளிச்சத்தில் தொட்டுப்புடிச்சி விளையாடி கொண்டிருந்தார்கள்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இன்றைய கலாச்சார அவலம் ஒலிபெருக்கியில் ஒலிப்பதை ரசித்த சில இளவட்டங்கள். தெருவின் தூரத்தில் இருந்து டிரம்ஸ்அடிக்கும்சத்தம்கேட்டது..ஒருவர் ஓடிவந்து அந்தப்பாட்டைபோடு என சத்தமாக சொன்னார்.தாய் மாமன் சீர்கொண்டு வாராண்டி என்ற பாட்டு படிக்கிற அந்த நேரத்தில் சீருடன்கூட்டம் உள்ளே வருகிறது.
பெரிய அண்டா ரெண்டு,பித்தளபானைரெண்டு தாம்பாலம் ரெண்டு,சிலுக்கு சேலை ரென்டு ரெட்டைசீராம் அதனால எல்லாம் ரெண்டுரெண்டு.சீருகொண்டு
வந்த கூட்டத்தின் நடுவில் தாய்மாமன் வர்ரத பாரு என என் பக்கத்தில் இருப்பவர் சொன்னார்.வெளிச்சம் சரியா இல்லாததால
பக்கத்தில் வந்தபிறகு தான் எனக்கு தெளிவா தெரிஞ்சது.கூந்தல்
வளர்த்து கைகளில் வளையல் போட்டு,தோடு மூக்குத்தியும் தான்.
அது குழந்தையின் தாய் மாமன். திருநங்கை பாலினத்தை சேர்ந்தவர்.அன்றைய செலவெல்லாம் அவருடையது தான்.சென்னையில் இருப்பதாகவும் ஒரு ஆட்டக் குழுவுடன் வேலை செய்வதாகவும் சொன்னார்கள்.கூட்டத்தில் ரொம்ப பேர்நக்கலாக பேசிக்கொண்டார்கள்.
கேலி செய்தார்கள்.எதையும் பொருட்படுத்தாமல் அந்த செய்முறைகளை அனைத்தையும் மாமன் ஸ்தானத்திலிருந்து செய்து கொண்டிருந்தார்.
செய்து முடிக்கவும் சாப்பாடு பந்தி துவங்கியது.கேலி பேசியவர்கள் முதல் பந்தியில் தனது கடமையை முடிக்க மும்முரமானார்கள்.சாப்பாட்டை பற்றி ., குழந்தையின் அலங்காரம் பற்றி கூட்டம் பேசிக்கொண்டது.பத்ரகாளி வந்தவர்களை வழியனுப்பிக்கொண்டிருந்தாள்.படித்தவர்களுக்கு
மூன்றாம் பாலின சமத்துவத்தை பாடம் நடத்திக்கொண்டிருக்கும்
போது அதை எல்லாம் அறியாத பத்ரகாளி உடன் பிறந்த சகோதரனை உன்மையாக அரவணைத்து நடந்துகொண்ட அவள் உயர்ந்து நிற்பதை அன்னாந்து பார்க்கிறேன்.அவளின் காலடி தடத்திலிருந்து.....
 

Sunday 6 October 2013

புதுமைசெய்






புதுமைசெய்
----------------------
செய்
ஏதாவது செய்
ரத்தம் சிந்திய
மண்ணையெடுத்து.,

அநீதிக்கெதிராய்
ஏதாவது செய்ய
உறுதி எடுத்துக்கொண்ட
வாலிபனின் வரலாற்றை

சொல்லிக் கொடுக்காமல்
மவுனமாய் இருந்து கொண்டன
கல்விச்சாலைகள்

பொது என்ற பேரமைப்பு
உலகில் மனிதவாழ்வின்
அதிசயத்தை நிகழ்த்திய போது
அடிமைச் சங்கிலியால்
பூட்டப்பட்டுக்கிடந்தோம்.

தண்ணீர்
மூழ்கடித்து விட்டதென
மீன்களெப்போதும்
சலித்துக் கொள்வதில்லை
மூழ்கடித்த இருப்பில்தான்
அதன் மூச்சுக்காற்றுண்டு

மனிதா
நெருக்கடிக்கு பயந்து
வாழ்க்கையை விட்டு ஓடாதே
செய்
ஏதாவது செய்
விடியல் நிச்சயம்
மாவோவின் வார்த்தைகள்
நம்பிக்கைகளை விதைத்தது.

உழைப்பும்-வளர்ச்சியும்
இருப்புக்கொண்டது
அண்டை தேசத்தில்

கருத்தால் கட்டுண்டோம்
பொருளால் கஷ்டப்பட்டோம்
இருள் சூழ்ந்த வாழ்க்கை
நிரந்தரம் அல்ல நமக்கு

முன்னால் செல்லும்
நம் வாழ்க்கை
உரத்துச் சொல்லிக்
கொண்டேயிருக்கிறது

பொது என்ற பேரமைப்பே
உலகின் வெளிச்சம்
உன்மை உழைப்பிற்கு
அதுவே மருந்து

செய்
ஏதாவது செய்

முத்துக்குமார்-



மாற்றம் விரும்பு








மாற்றம் விரும்பு

கற்றுக்கொடுக்க
முயற்ச்சிக்காதே-நீ 
கேட்பது,சொல்வது

அறிந்துகொண்டதைப் போல்
பாசாங்கு செய்வது-
நீயொரு நகல் என்பதுவே,.

உன்னை நீ
அடையாளத்திலிருந்து அழி.
அழிப்பதொன்றே
நீ வேறோன்றாய்
வருவதற்க்கான வழி

மாற்றம் விரும்பு;
மாறு;
மாறுதலே அனைத்திலும் நன்று…

முத்துக்குமார்.

கவிதை





அவன்
மானுடத்தின் வக்கீல்
அன்று
அவன் பெயரை
எழுதக் கூட
அனுமதிக்காமல்
மொழி
முடமக்கப்பட்டது

இன்றோ
சூரியன் கூட
அவன் பெயரை
உச்சரிக்காமல்
உதிக்க முடியவில்லை

அவன் இருந்த போதோ
தூசிக்கப்பட்டான்
இன்று
அவன் புதைகுழியின்
புல்லும் கூட
பூஜிக்கப்படுகிறது.

அழகைப் பார்த்து நான்
பிரமித்திருக்கிறேன்
என்னை
அறிவால் பிரமிக்கவைத்தவன்
அவன் தான்

அவன் கண்களில்…
உலகின் இருட்டையெல்லாம்
விரட்டியடிக்கும்
வெளிச்சம்

அவன் தான்
மனிதகுலத்தின்
இறந்த காலத்தையெல்லாம்
ஜெயித்து முடித்த சிந்தனையாளன்
கடவுளின் சிறைச்சாலையிலிருந்து
மனிதனை விடுவித்த
மகான்

அவன் தடுத்திராவிட்டால்
சரித்திரம்
தற்க்கொலையின் விளிம்புக்குத்
தள்ளப்பட்டிருக்கும்

பழைய சித்தாந்தங்கள்
முதலாளித்துவத்தின் புண்களை
முத்தமிட்டன

நிகழ்காலத்தின்
நிர்வாணம் மறந்து
அடுத்த ஜென்மத்திற்க்கு
ஆடை நெய்தன

ரொட்டியை இறைவன்
தயாரிக்கிறான்
அதில் புசிப்பவன் பெயரையும்
பொறிக்கிறான் என்றன

இலக்கியமும் கலையும்
இந்த
ஓட்டைச் சமூகத்தோடு
ஒத்துப்போகத்தானே
ஓதின ?

நீதி நூலெல்லாம்
கொழுந்து விட்டெரியும்
கோபத்தின்
இடுப்பை ஒடிக்கும்
ஏற்ப்பாடல்லவா ?

சிருஷ்ட்டிக்கப்பட்ட
செயற்கை இருட்டு
மனிதனைப்
பிறவிக் குருடென்றே
பேசவைத்தது

மார்க்ஸின்
சம்மட்டி அடியில்
மனிதகுலம்
தன்
துருக்கள் உதிர்ந்து துலங்கியது.

எழுந்திரு மனிதனே
உனக்கு
முன்னும் பின்னும்
இன்னொரு பிறவி
என்பதே இல்லை

நீ என்பதன்றோ
நிஜம்


சொர்க்கச் சிந்தனையை
நிறுத்தி விடு
வர்க்கச் சிந்தனையை
வளர்த்துவிடு

வியர்வைக்கு விலை
பரலோகத்தில்லை
இகலோகத்தில் உண்டென்று
இயம்பு”-
அவன் குரல்
அகிலத்தின் சுவர்களைஅசைத்தது

பழைய விருட்சங்களின்
விஷவேர்களைச் சென்று
விசாரித்தது
அவன்
பட்டபாடுகள் எத்தனை ?
அதோ
அந்த
அறிவின் பிதாமகன்
வறுமையின் மடியில்
வசித்த நாட்கள்…..

இரைப்பையைப்
பசிக்கு விற்றுவிட்டு
அவன்
அறிவுக்குச் சாப்பாடு போட்ட
அந்த நாட்கள்

ஜென்னியின் மார்பில்
பாலையும் துக்கத்தையும்
சேர்த்துப் பருகும் அந்த சின்னக் குழந்தை

கட்டுரை அனுப்புவதற்காய்
அடமானம் கிடக்கும்
குழந்தையின் காலணிகள்

உலகத்து வறுமையை
ஒழிக்க வந்தவனுக்கு
சுயவறுமை என்ன
சுடவா செய்யும் ?

அவனுக்கு
அஞ்சலி செலுத்தினால்
இருதய ரத்தம்
இன்னும் சிவக்காதோ ?

இனி எந்த தேசமும்
மின்சாரத்தையும்
மார்க்சையும்
ஒதுக்கி விட்டு
உயிர்வாழ முடியாது.


( கவிஞர்- வைரமுத்து )