Thursday 10 October 2013

சமத்துவம்



சமத்துவம்

தாம்பூல தட்டுடன் பத்ரகாளி ஆபிஸ் ரூம் உள்ளே வந்தாள்.
தட்டில் இரண்டு ஆப்பிள், இரண்டு ஆரஞ்சு கொஞ்சம் திராட்சை,
வெற்றிலை பாக்குடன் வாடிய அந்த முகத்தில் ஒட்டியிருந்த
சின்ன சந்தோசம்.என்ன ஏதோ விஷேசம் போல் தெரிகிறது என்று
கேட்டவுடன் லேசான வெட்கத்துடன் ஆமா சார் என் மக வயசுக்க
வந்துட்டா சடங்கு வச்சிருக்கேன் நாளை மறுநாள்
வியாழக்கிழமை சாயந்திரம்., நீங்க அவசியம் வந்து என் பிள்ளைய ஆசிர்வதிக்கனும் என சொல்லிக்கொண்டே தட்டை நீட்டினாள்.
கண்டிப்பா வர்ரேன் என சொன்ன எனக்கு தட்டைவாங்க மனசு வர்ல.
ரெண்டு நாளுக்கு முன்னாடி காலைல வேலைக்கு வரும் போது என்ன பத்ரகாளி நேத்து வேலைக்குஆள காணோம் என கேட்ட போது சார் திடீரென காய்ச்சல் வந்துபெரிய ஆஸ்பத்திரிக்கு போனென் சார் பெட்ல சேத்து குளுகோஸ்ஏத்துனாங்க அதுனால வரமுடியல என சொன்ன போது மனசு
ரொம்ப சங்கடப்பட்டது.ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வர வேண்டியதுதானே என நான் சொன்னதை கேட்டு  பதறி போனாள்.உடம்ப சரி செஞ்ச பின்னாடி வா என சொல்லிவிடுவேன் என பயந்திருப்பாள் போல.நேத்து ஆஸ்பத்திரியிலிருந்த அவள் இன்று வேலைக்கு வர வேண்டிய
வாழ்வின் கஷ்டம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என என்னால்
உணர முடிந்தது.அதனால் தட்டில் உள்ள அவளின் மரியாதையை
ஏற்றுக்கொள்ள மனம் தயங்கியது.எடுக்கா விட்டால் தனது அன்பான அழைப்பை நான் புரிந்துகொள்ளவில்லை என்று அவளின் மனம் புண்படுமோ என பயந்து வாங்கிக்கொண்டேன்.

அந்த நாளும் வந்தது. கொஞ்சம் லேட்டா தான் போனேன்.ஊர்காரர்களும்,சொந்தபந்தங்களும் வீட்டின்முன் போட்டிருந்த சேர்களில்..சிலர் தள்ளாடியபடி..சிறுவர்கள் டியூப்லைட் வெளிச்சத்தில் தொட்டுப்புடிச்சி விளையாடி கொண்டிருந்தார்கள்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் நாங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இன்றைய கலாச்சார அவலம் ஒலிபெருக்கியில் ஒலிப்பதை ரசித்த சில இளவட்டங்கள். தெருவின் தூரத்தில் இருந்து டிரம்ஸ்அடிக்கும்சத்தம்கேட்டது..ஒருவர் ஓடிவந்து அந்தப்பாட்டைபோடு என சத்தமாக சொன்னார்.தாய் மாமன் சீர்கொண்டு வாராண்டி என்ற பாட்டு படிக்கிற அந்த நேரத்தில் சீருடன்கூட்டம் உள்ளே வருகிறது.
பெரிய அண்டா ரெண்டு,பித்தளபானைரெண்டு தாம்பாலம் ரெண்டு,சிலுக்கு சேலை ரென்டு ரெட்டைசீராம் அதனால எல்லாம் ரெண்டுரெண்டு.சீருகொண்டு
வந்த கூட்டத்தின் நடுவில் தாய்மாமன் வர்ரத பாரு என என் பக்கத்தில் இருப்பவர் சொன்னார்.வெளிச்சம் சரியா இல்லாததால
பக்கத்தில் வந்தபிறகு தான் எனக்கு தெளிவா தெரிஞ்சது.கூந்தல்
வளர்த்து கைகளில் வளையல் போட்டு,தோடு மூக்குத்தியும் தான்.
அது குழந்தையின் தாய் மாமன். திருநங்கை பாலினத்தை சேர்ந்தவர்.அன்றைய செலவெல்லாம் அவருடையது தான்.சென்னையில் இருப்பதாகவும் ஒரு ஆட்டக் குழுவுடன் வேலை செய்வதாகவும் சொன்னார்கள்.கூட்டத்தில் ரொம்ப பேர்நக்கலாக பேசிக்கொண்டார்கள்.
கேலி செய்தார்கள்.எதையும் பொருட்படுத்தாமல் அந்த செய்முறைகளை அனைத்தையும் மாமன் ஸ்தானத்திலிருந்து செய்து கொண்டிருந்தார்.
செய்து முடிக்கவும் சாப்பாடு பந்தி துவங்கியது.கேலி பேசியவர்கள் முதல் பந்தியில் தனது கடமையை முடிக்க மும்முரமானார்கள்.சாப்பாட்டை பற்றி ., குழந்தையின் அலங்காரம் பற்றி கூட்டம் பேசிக்கொண்டது.பத்ரகாளி வந்தவர்களை வழியனுப்பிக்கொண்டிருந்தாள்.படித்தவர்களுக்கு
மூன்றாம் பாலின சமத்துவத்தை பாடம் நடத்திக்கொண்டிருக்கும்
போது அதை எல்லாம் அறியாத பத்ரகாளி உடன் பிறந்த சகோதரனை உன்மையாக அரவணைத்து நடந்துகொண்ட அவள் உயர்ந்து நிற்பதை அன்னாந்து பார்க்கிறேன்.அவளின் காலடி தடத்திலிருந்து.....
 

3 comments:

  1. காலடியும்,காலடி மண்ணும் கற்றுத்தரும் பாடங்கள் இங்கு நிறையவே/நல்ல களம் கொண்ட கதை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தோழர் விமலன் அவர்களே,

    ReplyDelete
  3. மாமா , உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் என்றே நம்புகிறேன், அருமை.

    ReplyDelete